பாலினமும் சமூகஅந்தஸ்தும்

பாலினம் என்பது இயற்கையானது. ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக இருக்கும். ஆனால் பால்நிலை என்பது அவ்வாறு இருக்க முடியாது. பால்நிலை சமத்துவமாகவே இருத்தல் வேண்டும். அதுவே சிறந்தவொரு விடயமாகும். பால்நிலை என்பது பாலினம் ஒன்றிற்குள்ள மதிப்பு சலுகை வாய்ப்பு என்பனவாகும்.

பாலினம் என்பது பிரதானமாக மூன்று வகைப்படும். அவையாவன

ஆண் பாலினம்
பெண் பாலினம்
மாற்றுப் பாலினம்

இந்த பாலினங்கள் எல்லாமே ஒரே விதமாக நடத்தப்படுகின்றனவா? பார்க்கப்படுகின்றனவா? என்பதே தற்போது நாம் எழுப்பும் கேள்வி ஆகும். இதற்கு பதில் இல்லை என்றே வரும். தெரிந்தோ தெரியாமலோ நாம் பால்நிலையில் சமத்துவத்தை உருவாக்கவில்லை. மிகச்சரியானது என்னவென்றால் உருவாக்க விரும்பவில்லை என்பதே ஆகும். ஒரு பாலினத்துக்கு வழங்கப்படும் சலுகை இன்னொரு பாலினத்துக்கு மறுக்கப்படுகிறது. அதுவே சமூகத்தின் சமநிலையை குழப்புகிறது. சமூகம் மட்டுமல்லாது அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என்பனவற்றிலும் இதன் தாக்கத்தை உணரமுடியும்.

ஆண் பாலினம்

எங்களுடைய தமிழ் சமூகத்தை பொறுத்தவரை எப்போதுமே ஆண்களை முதன்மைப்படுத்திய ஒன்றாகவே காணப்படுகிறது. இதனா‌ல் எந்தவிடயத்திலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக தற்போது காணப்படும் தந்தை வழிசமுதாயம் இதற்கான அடிப்படை காரணம் ஆகும். அரசியல், பொருளாதாரம், வாழ்வியல், சமூகம் போன்றனவற்றில் எல்லாம் ஆணுக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலைமை காணப்படுகிறது. முன்னுரிமை வழங்குவது என்பது தவறல்ல. அது எல்லோருக்கும் உரியதாக இருத்தல் வேண்டும். குறிப்பாக ஒரு தரப்பினருக்கு மட்டும் சார்பாக இருத்தல் தவறாகும்.

தந்தையின் பெயரில் உள்ள முதலெழுத்தை குழந்தையின் முதலெழுத்தாக வழங்குதல். தாயின் முதலெழுத்தை யாரும் பயன்படுத்துவதில்லை.

குடும்பத் தலைவரின் விபரங்களுக்கு அடுத்ததாகவே குடும்ப தலைவியின் விபரங்கள் அரச மற்றும் தனியார் அமைப்புகளால் கோரப்படும்.

சமய, சமூக, அரசியல் அமைப்புகளின் முக்கியத்துவமான பொறுப்புக்களில் தீர்மானிக்கும் தரப்பாக ஆண்கள் காணப்படல். பெண்களுக்கு இந்த வகிபாகம் வழங்கப்படாது. வழங்கப்பட்டாலும் கண் துடைப்பாகவே காணப்படும்.

பெண் பாலினம்

தமிழ் சமூகத்தை பொறுத்தவரை தன்னெழுச்சியாக முன்னேறி வரும் பெண்களால் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் கூட சாதாரணமாக மாற்றங்கள் ஏற்படவில்லை. சமூகமாக முன்வந்து பெண்களுக்குரிய அந்தஸ்தையோ உரிமைகளோ வழங்காத, வழங்க விரும்பாத நிலையே காணப்படுகிறது. ஆனாலும் போட்டி மிகுந்த சூழலில் கடும் போட்டியை ஏனைய தரப்புகளுக்கு வழங்குகின்றனர்.

"காலம் காலமாக ஆதிக்க சிந்தனை கொண்ட ஆண்களின் மனம்"
"ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே"

என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் பெண்களின் நிலையை உணர்த்தும்.

ஆரம்ப காலத்தில் பெண்கள் கல்வி, சமூக, அரசியல், பொருளாதார போன்ற விடயங்களில் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளமுடியாது. ஆனால் நவீன ஜனநாயக சூழல் இந்நிலையில் ஏற்படுத்திய மாற்றம் பெரும் வழியை பெண் பாலினத்துக்கு திறந்து விட்டது. ஆனாலும் ஆண்களை மையமாக கொண்ட சமூகமானது இதனை ஏற்க மறுத்து வருகின்றமை மறுதலிக்க முடியாத உண்மையாகும்.

நாட்டில் அதிக சனத்தொகை கொண்ட பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் எந்த மக்கள் சபைகளிலும் வழங்கப்படவில்லை. அதேநேரம் 25%,30% என பெண்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் அவை கூட நடைமுறைக்கு வரும் போது சில சிக்கல்களை எதிர்கொள்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஆரம்பித்தில் பெண்கள் எல்லாரும் வீட்டில் இருந்து கணவனுக்குரிய பணிகளை செய்வது, பிள்ளைகளை பராமரிப்பது, சமைய‌ல் செய்வது என்று வீட்டை மையப்படுத்திய வாழ்க்கை முறையாகவே காணப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலன குடும்பங்களில் பெண்களே பிரதான வருமான மூலங்களாகவே காணப்படுகின்றன. ஆனாலும் பெண்களுக்குரிய நிலையை ஆண்களுக்கு நிகராக வழங்க யாரும் தயாரில்லை.

மாற்றுப் பாலினம்

தற்போதைய காலத்தில் பெண்களை விட அதிகளவிலான நெருக்கடியை எதிர்கொள்ளும் பாலினத்தவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் தங்கள் வித்தியாசமான நடத்தை பாணிகள் மூலம் தம்மை வெளிப்படுத்துகின்றனர். குடும்பத்தில் உள்ளவர்களாலேயே இவர்கள் வீட்டில் இருந்து விரட்டப்படும் நிலை காணப்படுகிறது. ஏனைய சமூக பிரிவினரால் இவர்கள் கேலிக்குரியவர்களாகவும் நகைச்சுவை பொருளாகவும் பார்க்ப்படுகின்றமை கவலையான அம்சமாகும். அவர்களும் மனிதர்கள் அவர்களுக்கும் உணர்வு உள்ளது என்பதை பெரும்பாலானவர்கள் ஏற்பதில்லை. இவர்கள் சமூகத்தில் மிககுறைந்த அளவிலேயே காணப்படுகின்றனர்.

மாற்றுப் பாலினத்தவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களின் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக அரசே ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். ஏனென்றால் சமூகம் இவர்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை.


முடிவு

தமிழ் சமூகத்தை பொறுத்தவரை எப்போதுமே பாலினம் என்பதே அவர்களுக்குரிய நிலையை வழங்கும் அம்சமாக காணப்படுகிறது. பால்நிலையில் உள்ள சமத்துவமற்ற நிலைமையினை சமூகமும் நாமும் உணராத வரை சமூக சமச்சீரற்ற தன்மை தொடர்ந்து இருக்கும்.


Comments